• Mon. Nov 16th, 2026

தேனியில் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம்..,

ByAjmalkhan saleemraja

Nov 16, 2026

தேனி மாவட்டம், பழனிசெட்டிப்பட்டியில் அமைந்துள்ள திருமுருகன் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 10-ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இன்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணக் கோலத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது.

முன்னதாக, முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளங்கள் மற்றும் நாதஸ்வர இசை முழங்க கோயில் வளாகத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து, வள்ளி, தெய்வானைக்கு வண்ண வண்ண பட்டாடைகள் அணிவிக்கப்பட்டு, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில் மாலை மாற்றும் நிகழ்ச்சி உள்ளிட்ட திருமணச் சடங்குகள் மூன்று முறை நடைபெற்றன. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு தூப தீபங்கள் மற்றும் பல்வேறு வகையான தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.

இந்த திருக்கல்யாண வைபவத்தில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமானின் திருக்கல்யாணக் கோலத்தை கண்டு தரிசனம் செய்து சென்றனர்.