தேனி பழனிசெட்டிப்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ திருமுருகன் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக முருகப் பெருமானுக்கு தயிர் சந்தனம் தேன் மஞ்சள் இளநீர் உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது
தொடர்ந்து முருகப்பெருமான் கையில் வேலுடன் வண்ண மலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

பின்னர் கோயில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட முருகப்பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க வீதி உலா புறப்பட்டார்.

வீதி உலாவின் போது வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அரோகரா அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டனர்.
தொடர்ந்து கஜமுகம், சிங்கமுகன், வானுகோபன் மற்றும் சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை தனது வேலால் வதம் செய்து முருகப்பெருமான் சூரசம்ஹாரம் செய்தார்.

இந்த விழாவில் பழனிசெட்டிப்பட்டி, தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சூரசம்ஹார நிகழ்ச்சியை கண்டு தரிசித்துச் சென்றனர்.