• Mon. Nov 16th, 2026

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..,

ByAjmalkhan saleemraja

Nov 16, 2026

தேனி மாவட்டம், போடி அருகே சிலமலை கிராமத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சிலமலை கிராமம் பட்டாளம்மன் கோவில் தெருவில் தீபாவளி அன்று பட்டாசு வெடித்தபோது, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் தங்களை அவதூறாகப் பேசியதாகவும், ஹரிஷ்குமார் மற்றும் வினில் ஆகிய இருவரைத் தாக்கியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 15 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாக்குதலுக்கு நீதி கேட்டு போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, தங்களது கோரிக்கைகள் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.