• Mon. Nov 16th, 2026

அதிவேகமாக இயக்கப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்..,

BySeenu

Nov 16, 2026

கோவை சூலூர் அருகே தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் எதிர்திசையில் அதிவேகமாக இயக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநர் மீதும், டிடிஎஃப் வாசன் மீது பதிவு செய்யப்பட்டதைப் போன்ற கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம், சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகே கோவை – திருப்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்து ஒன்று, பயணிகளுடன் எதிர்திசையில் அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த சம்பவத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் பேருந்து உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேக் முகமது, சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மீது டிடிஎஃப் வாசன் மீது பதிவு செய்யப்பட்டதைப் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், செல்வகுமார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் சார்பில் கோவை – திருப்பூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து, பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் எதிர்திசையில் சென்ற வீடியோ வெளியாகியுள்ளதாகத் தெரிவித்தார். தனியார் வாகனங்கள் இதுபோன்று பலமுறை விதிமீறி இயக்கப்படுவதாகவும், இதுபோன்ற சம்பவங்களில் ஓட்டுநர்களுக்கு சில மாதங்கள் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுவதால், மீண்டும் அதேபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனங்களை இயக்குபவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 110-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படுவதால், வாகன உரிமையாளர்கள் அபராதத்தைச் செலுத்திவிட்டு மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசியதாக டிடிஎஃப் வாசன் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 308-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே மற்றவர்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், இதுவரை கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே எதிர்திசையில் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கனரக வாகனங்களும் இதுபோன்று இயக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் மீது காவல்துறையும் போக்குவரத்துத் துறையும் உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.