தேனியில் 75 ஆவது ஆண்டு சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவை முன்னிட்டு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை பிரதிபலிக்கும் மாணவ மாணவியரின் அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சியை தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் துவக்கி வைத்தார்.
தேனி வடபுதுபட்டியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டின் 75 ஆவது ஆண்டு சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்வி,அறிவியல் கலை,பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 2500 கற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் இணைந்து அலங்கார அணிவகுப்பு மாதிரிகளை உருவாக்கி அசத்தினர்.
இதில் இடம்பெற்றிருந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் உருவங்கள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை உணர்த்தும் பல்வேறு மாநிலங்களின் கலாச்சார சிறப்புகள் என அனைத்தும் பார்ப்போரின் கண்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.
மேலும் வின்வெளி,மருத்துவம்,
ரயில்வே,ராணுவம் என அனைத்து துறைகளிலும் தேசம் அடைந்த வளர்ச்சியினை பறைசாற்றும் வகையிலும் பல்வேறு காட்சிகள் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.
இதில் பங்கேற்றவர்கள் சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவை குறிக்கும் விதமாக 75 என்ற எண் வடிவத்தில் ஆங்காங்கே அமர்ந்து அணிவகுப்பிற்கு சிறப்பு சேர்த்தனர்.
இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கல்லூரி மாணவ மாணவியர்களை வெகுவாக பாராட்டினார்.