• Sat. Apr 20th, 2024

உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பா ?

திமுக இளைஞரணி செயலர் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி வழங்க ஆலோசனை நடந்த நிலையில், தற்போது துணை முதல்வர் பதவி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவது தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், அமைச்சர்களின் இலாகாக்களில் அதிரடி மாற்றம் வரும் என்ற பேச்சு, கோட்டை வட்டாரங்களில் இறக்கை கட்டி பறக்கிறது. சரியாக செயல்படாத அமைச்சர்களிடம் இருந்து, முக்கிய இலாகாக்கள் பறிக்கப்பட்டு, வேறு அமைச்சர்களிடம் கூடுதல் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட உள்ளன. திமுக இளைஞரணி செயலர் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி வழங்க ஆலோசனை நடந்த நிலையில், தற்போது துணை முதல்வர் பதவி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இதற்காக, மாணவர்கள், இளைஞர்களை கவரும் வகையில் புதிய இலாகாக்களை உருவாக்கி, அவரிடம் ஒப்படைக்கவும் மேலிடம் திட்டம் தீட்டியுள்ளதாம்.


கடந்த 2006 – 11ல் திமுக ஆட்சியில் முதல்வராக கருணாநிதியும், துணை முதல்வராக ஸ்டாலினும் இருந்தனர். உள்ளாட்சி அமைச்சர் பதவி வகித்த ஸ்டாலின், தமிழகம் முழுதும் மக்களுக்கும், உள்ளாட்சிக்கும் தொடர்புடைய பணிகளை மேற்கொண்டார். இது கருணாநிதிக்கு பெரும் உதவியாக இருந்தது. தற்போது ஸ்டாலினுக்கு உதவும் வகையில், உதயநிதியை துணை முதல்வராக்கி, அவரது நிர்வாக திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்க வேண்டும் என்று, அமைச்சர்கள் சிலர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்ற பின், முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *