• Mon. Apr 21st, 2025

கச்சத்தீவை மீட்க கோரிய வழக்கு இன்று விசாரணை!

ByP.Kavitha Kumar

Mar 25, 2025

கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கில் 5 ஆண்டுகளுக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கைக்கு இடையிலான 1974 மற்றும் 1976-ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது செல்லாது என அறிவிக்க கோரி, கடந்த 2008-ம் ஆண்டு அன்றைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயல்லிதாவும், ஏ.கே.செல்வராஜ் என்பவர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கில் கடந்த 2009 ஜனவரி 5-ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் வழக்கு விசாரணை விரைந்து நடைபெறாததால், வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2012 செப்டம்பர் 18ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்த மனுவை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா மூன்றாவது முறையாக கடந்த 2011-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பதவியேற்றதும், சட்டப்பேரவையில் அறிவித்தபடி கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்த அனைத்து தகவல்களையும் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையும் இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்த்துக் கொள்ளப்பட்டது. , கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் தொடர்கதையாகி வரும் மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய பிரதமருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதங்களும் மனுவோடு இணைக்கப்பட்டன. இதனிடையே கடந்த 21.09. 2013-ம் தேதி கச்சதீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை தமிழக அரசின் வருவாய்த்துறை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதனையடுத்து இந்த வழக்கு கடைசியாக கடந்த 2020-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், 5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில், இந்த வழக்கு விசாரணைக்கு இன்று பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.