• Sun. Mar 16th, 2025

நர்ஸை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த டாக்டர் மீது வழக்கு

ByM.maniraj

Jun 1, 2022

கோவில்பட்டியில் நர்ஸை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த டாக்டர் மீது வழக்குப்பதிவு. தலைமறைவான டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே சாலைப்புதூரை சேர்ந்த செவிலியர் பட்டயப் படிப்பை முடித்த இளம்பெண் ஒருவர் கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஸ்ரீ முரளி மருத்துவமனையில் நர்சாக கடந்த மாதம் 20ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சேர்ந்த இரண்டாவது நாளே அந்த நர்ஸ் பெண்ணுக்கு டாக்டர் முரளி பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தாராம். பின்னர் நைட் டூட்டி ஒதுக்கீடு செய்து நள்ளிரவில் தனது அறைக்கு வரச்சொல்லி தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது.
செக்ஸ் டார்ச்சரால் பாதிக்கப்பட்ட அந்த நர்ஸ் பெண், டாக்டரின் மனைவியும் மகப்பேறு மற்றும் கருத்தரித்தல் சிறப்பு மருத்துவருமான விமலா தேவியிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் உரிய விசாரணை நடத்தாமல் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு புகார் தெரிவித்த நர்ஸ் பெண்ணை இழிவுபடுத்தி வேலையை விட்டு வெளியேற்றியுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த நர்ஸ் தனது வீட்டில் தனிமையில் இருந்த போது விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நர்ஸ் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மகேஸ்வரி விசாரணை நடத்தினார். முதல்கட்ட விசாரணையில் டாக்டர் முரளி மீதான புகாரில் ஆதாரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர் முரளி மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார். இதனிடையே விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை அறிந்த டாக்டர் முரளி தலைமறைவாகினார்.தலைமறைவான டாக்டர் முரளியை போலீசார் தேடி வருகின்றனர்.