• Fri. Apr 19th, 2024

பாஜகவை விளாசிய எதிர்க்கட்சியினர்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
பட்ஜெட் தாக்கலில் இடம் பெற்றிருந்த விவகாரங்கள் குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்த ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஏழைகள் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். நாடு முழுவதும் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து குறிப்பிட்ட அவர்கள், , பெரிய பெரிய கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே இந்த பட்ஜெட் நன்மை அளிக்கும் என்று தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சி மூத்த உறுப்பினர் கபில் சிபில், இந்த பட்ஜெட்டில் எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லை, நீண்ட கால திட்டங்களும் இல்லை என்று அறிவித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பாஜக தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும். அப்போது தான் இந்த நாட்டின் கள நிலவரம் என்ன என்பது அவருக்கு புரியும் என்றும் கூறினார்.

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் நேற்று பேசிய போது, ’70 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமைச்சரவை உறுப்பினர்கள், கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நிற்பது இதுவே முதல்முறை’ என்று குறிப்பிட்டார். பின்பு தன்னுடைய ட்விட்டரில் ட்வீட் செய்த அவர், ‘இணை அமைச்சர்கள் இன்னும் மோசம், ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட தகவல்களையும், மோடி கோஷங்களையும் இங்கே வந்து பாடுகின்றனர்’ என்று குறிப்பிட்டார்.

பொதுமக்களுக்கான்ன முன்னுரிமையை அடையாளப்படுத்துவதில் தோல்வியுற்றது பாஜக என்று கூறினார் சி.பி.ஐ. உறுப்பினர் ஜர்னா தாஸ் பைத்யா. எல்.பி.ஜி. சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்பட்டது தொடர்பாகவும், அங்காடி ஊழியர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் ஏதும் கொண்டு வரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சியின் சுக்ராம் சிங் யாதவ், விவசாயிகளின் போராட்டம் குறித்தோ, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிரைவிட்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்குவது குறித்தோ ஏன் எதுவும் பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

திமுக எம்.பி. முகமது அப்துல்லா இந்த பட்ஜெட் குறித்து பேசிய போது, உலகத்திலேயே இல்லாத ஒன்றுக்காக 30% வரி விதிக்கப்பட்டது இதுவே முதல் முறை. கிரிப்டோகரன்சி சட்டமாக்கப்படவே இல்லை. ஆனால் அதற்கு 30% வரி விதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மேற்கொண்டு பேசிய அவர், பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்திற்காக பயன்படுத்தப்படும் ‘சானிட்டரி நாப்கின்களுக்கு’ 12% வரி ஆனால், வைர நகைகளுக்கான இறக்குமதி வரி வெறும் 5% என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஏழைப் பொதுமக்களின் நலன்களை முற்றிலுமாக இந்த பட்ஜெட் புறந்தள்ளிவிட்டது என்று தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *