• Fri. Apr 26th, 2024

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் யார்?

சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வினோத் என்ற நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். தி நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் இரவு 1.30 மணிக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பைக்கில் வந்த மர்ம நபர் பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் நடத்தியதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு பாஜக சார்பாக கூடுதல் பாதுகாப்பு கேட்டு சென்னை கமிஷ்னரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இரவு 1.30 மணிக்கு பாஜக அலுவலகம் அருகே பைக்கில் வந்த அந்த நபர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட போது பாஜக அலுவலகத்தில் யாரும் இல்லை. இரவு நேரம் என்பதால் வாட்ச் மேன் தவிர யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. தி நகர் துணை ஆணையர் தலைமையில் இது பற்றி விசாரணை நடந்து வருகிறது.
மொத்தமாக மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார். இதில் ஒரு பெட்ரோல் குண்டு கீழே விழும் தீ அணைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குண்டு மட்டும் வெடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு தற்போது போலீஸ் பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல் குண்டின் கண்ணாடி சிதிலங்கள் ஆதாரத்திற்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாஜக கூடுதல் பாதுகாப்பு கேட்டுள்ளது. தங்கள் அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று காவல்துறை ஆணையருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.எங்கள் அலுவலகம் குறி வைக்கப்பட்டுள்ளது. தீவிரவாத செயல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் எங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பாஜக சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் இப்படி செய்ததாக தகவல்கள் வந்தாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இதற்கு முன்பே இவர் பல முறை இப்படி பெட்ரோல் குண்டு தாக்குதல்களை நடத்தி இருக்கிறார். இவர், 2017ஆம் ஆண்டு டாஸ்மாக் கடையிலும் ,தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் இதேபோன்று பெட்ரோல் குண்டு வீசி குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்.
கருக்கா வினோத் என்ற பெயரில் இவர் அழைக்கப்பட்டு வருகிறார். காசுக்காக பெட்ரோல் குண்டு வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அபப்டி இருக்கும் போது இவர் எப்படி நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் குண்டு வீசுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. 2015 ம் ஆண்டு டாஸ்மாக் கடையிலும், 2017 ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதானார்.

இவரை போலீசார் ஏற்கனவே பல வழக்கில் தேடி வந்துள்ளனர். 2017ல் போலீஸ் தன்னை தேடியதால் கோபம் அடைந்து இவர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த நிலையில்தான் மீண்டும் இவர் தற்போது பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இதனால் இவரின் செயலுக்கு பின் வேறு யாராவது ரவுடிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பணம் கொடுத்து யாரேனும் குண்டு வீசச் சொல்லியுள்ளனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *