• Sat. Apr 20th, 2024

அம்மா மினி கிளினிக் முதலமைச்சர் கிளினிக் ஆக மாறியது

Byகாயத்ரி

Nov 27, 2021

சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, நவப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் துவக்கப்பட்டது.

இந்நிலையில், நான்கு நாட்களுக்கு முன் நவப்பட்டி அம்மா மினி கிளினிக் முன்புறம் இருந்த பெயர் பலகை திடீரென மாற்றப்பட்டது. அப்பகுதி திமுகவினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படத்துடன், ‘முதலமைச்சர் மினி கிளினிக்’ என பெயர் பலகை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கொளத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விமலா கூறுகையில், ”அரசு விதியை மீறி வைத்துள்ள பெயர் பலகையை அகற்றக் கோரி ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து சுகாதாரத் துறைக்கும் அறிக்கை அனுப்பியுள்ளோம்” என்றார்.

நவப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் காளியம்மாள் கூறியதாவது: “அம்மா மினி கிளினிக் பெயர் பலகையை மாற்றம் செய்து, ஊராட்சி அலுவலகம் முன் திமுகவினர் பெயர் பலகை வைத்துள்ளனர். இதற்காக, ஊராட்சியில் எந்தவித அனுமதியும் பெறவில்லை. இது குறித்து, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டோம்” என அவர் கூறினார்.ஏற்கனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்துடன், அம்மா உணவகங்கள் செயல்படும் நிலையில், மதுரையில் ஓர் உணவகத்தில் கருணாநிதி படமும் வைக்கப்பட்டது. இது சர்ச்சையானதும், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவர் படங்களுமே நீக்கப்பட்டன.இந்நிலையில், சேலத்தில் அம்மா மினி கிளினிக் பெயர் மாற்றப்பட்டு, அதில் இருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா படம் நீக்கப்பட்டு, கருணாநிதி, ஸ்டாலின் படங்களுடன், முதலமைச்சர் கிளினிக் என எழுதப்பட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *