காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கம் கிராமத்தில் தனியார் எரிவாயு சிலிண்டர் குடோனில் திடீர் தீ விபத்தில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஏ.எஸ்.என் கேஸ் ஏஜென்சி என்ற பெயரில் ஜீவானந்தம் என்பவர் கேஸ் குடோன் நடத்தி வருகிறார். இந்த கேஸ் குடோனில் இருந்து ஒரகடம் சுற்றுவட்டார தொழிற்சாலைகளுக்கு வணிக ரீதியான கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டின் அருகில் உள்ள கேஸ் குடோனில் திடீரென தீப்பிடித்தது. குடோனில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் ஜீவானந்தம், பூஜா, சந்தியா, நிவேதா, கோகுல் மற்றும் லாரி ஓட்டுனர்கள் இரண்டு பேர் என 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இவர்கள் அனைவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காஞ்சிபுரம், மறைமலைநகர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.