தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்து வருகிறது. இந்த நிலையில் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மதவழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை போன்ற பல்வேறு தடைகள் இருந்து வந்தது.

இந்த நிலையில், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன. மேலும் பல்வேறு தரப்பு பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், மத்திய அரசு வழிகாட்டுதலின்படியே இந்த நடைமுறை தொடருகிறது என தமிழக அரசு தெரிவித்தது. இந்த நிலையில், தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்கவும், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதியும் அளித்துள்ளது.
இருப்பினும், அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தொடர்ந்து தடை நீட்டிக்கும் என அரசு அறிவித்துள்ளது.
இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இருப்பினும், பண்டிகைக் காலம் என்பதால் பொது மக்கள் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியது முக்கியம்.