கர்நாடகாவில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என அம்மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோடை காலம் நெருங்கிவிட்டதால், வெப்பம் தற்போது மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெப்பநிலை பல நோய்களை கொண்டு வரலாம். இந்தியாவில், கோடைக்காலம் ஆண்டின் வெப்பமான பருவமாகும். பொதுவாக மார்ச் – ஜூன் மாதம் வரை வெப்பமாக இருக்கும். பொதுவாகவே கோடை காலத்தில் நமது உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாவிட்டால், கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி ஆகியவை பொதுவான கோடைக்கால நோயைக் கொண்டுவரும். கோடை காலங்களில் கடும் வெப்பத்தால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது. அந்த வகையில் தான், கர்நாடகாவில் வெப்ப அலை அதிகரித்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே பிற்பகலில் கடும் வெப்ப அலை வீசி வருகின்றது. பல்வேறு இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இந்நிலையில், பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வெப்பம் தொடர்பான நோய்கள் உங்களை தாக்காமல் இருக்க, தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
பயணம் செய்யும்போது ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், மோர், தர்பூசணி போன்ற வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களை எடுத்துச் செல்லலாம். அதேபோல் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் வெளியில் சுற்றாமல் பாதுகாப்புடன் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வெயிலில் வேலை செய்பவர்கள் அதிகளவிலான தண்ணீரை குடிக்க வேண்டும் என்றும் முடிந்தவரை பகல் நேரங்களில் பணியை தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் வெப்பநிலை அதிகரிப்பு
