தாம்பரம் அடுத்த முடிச்சூர் வரதராஜபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

சங்கத்தின் மாநிலத் தலைவர் கு. தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆசிரியர் நலனை முன்னிறுத்தி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் கு. தியாகராஜன், உச்சநீதிமன்றத்தின் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான தீர்ப்பால் பல ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறினார்.
எனவே, ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பே பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்கும் வகையில், தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் உரிய விளக்கம் பெற தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்காக விடுமுறை எடுத்து தயாராகும் சூழல் உருவானால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆதரித்த அரசியல் கட்சிகள் தங்களது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும், அதுவரை தற்போது நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியர்கள் இடமாற்ற கலந்தாய்வு நீதிமன்றத் தடையில் உள்ள நிலையில், விதிமுறைகளை மீறி பணி மாற்றங்கள் செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும், அரசுப் பள்ளிகளில் நிரந்தர தூய்மை பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.




