• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பெருமிதம்… ஆனால் வெறும் கைகளால் சாக்கடை அள்ளும் அவலம்..,

ByKalamegam Viswanathan

Sep 4, 2026

மதுரை மாநகராட்சி விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் நாகஜோதியின் கணவர் சித்தன், தூய்மை பணியாளர்களை எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் சாக்கடையை அள்ளும் பணியில் ஈடுபடுத்தியதாக கூறப்படும் காணொளி காட்சி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சியை சித்தனே பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மனிதக் கழிவுகள், கழிவுநீர் மற்றும் பல்வேறு வகையான குப்பைகள் தேங்கியுள்ள சாக்கடைக்குள் இறங்கி பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு, கையுறை, காலணி, முகக்கவசம் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், அந்த பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் நேரடியாக கைகளால் சாக்கடையை அள்ளும் நிலைக்கு தூய்மை பணியாளர்கள் தள்ளப்படுவது அவர்களின் பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.

மாநகராட்சிகளில் தூய்மை பணியாளர்களின் பணி என்பது சாதாரண வேலை அல்ல. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக, மற்றவர்கள் செய்யத் தயங்கும் பணிகளை அவர்கள் தினமும் செய்து வருகின்றனர். மழை, வெயில் என எந்த சூழலிலும் கழிவுநீர் கால்வாய்கள், சாக்கடைகள், குப்பை தேங்கும் இடங்கள் என பல்வேறு ஆபத்தான பகுதிகளில் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், தூய்மை காவலர்கள், தூய்மை தேவதைகள் என சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பெருமையுடன் குறிப்பிடும் தூய்மை பணியாளர்களின் கள நிலை உண்மையில் எப்படி இருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது.
வார்த்தைகளால் அவர்களைப் பாராட்டுவது மட்டும் போதுமா?
அவர்களின் பணியிடத்தில் உரிய பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் கடமை அல்லவா? மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் இவர்களின் உடல்நலத்தையும் உயிரையும் பாதுகாப்பது யாருடைய பொறுப்பு? என்ற கேள்வியும் எழுகிறது.

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறதா? அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா? பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதையும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஒருபுறம் சட்டமன்றத்தில் தூய்மை பணியாளர்களின் பணியைப் போற்றிப் பேசும் நிலையில், மறுபுறம் வெறும் கைகளால் சாக்கடையை அள்ளும் அவலநிலை தொடருமானால், அவர்களின் வாழ்க்கை நிலை எப்போது மாறும்? என்பதே பொதுமக்கள் மத்தியில் எழும் கேள்வியாக உள்ளது.

தூய்மை பணியாளர்களை தேவதைகள் என்று அழைப்பது மட்டும் போதாது… அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பான பணிச்சூழலையும், மனித மரியாதையையும் உறுதி செய்வதே உண்மையான அங்கீகாரம்.

இந்த காணொளி தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி, தூய்மை பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, இனி இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.