• Mon. Jul 20th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம்..,

ByKalamegam Viswanathan

Jul 19, 2026

மதுரை மேற்குத் தொகுதிக்குட்பட்ட பொன்மேனி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, பொன்மேனி பகுதி த.வெ.க. செயலாளர் லட்சுமணன் ஏற்பாட்டில், 700-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கு எம்.எல்.ஏ எஸ்.ஆர்.தங்கப்பாண்டி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, தவெக எம்எல்ஏ எஸ்.ஆர் தங்கப்பாண்டி மேடையில் பேசுகையில்,

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர்ராஜு மற்றும் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் முதலமைச்சர் விஜய் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருவதாகக் கூறினார். “அவர்களுக்கு மனநிலை சரியில்லை என்று நினைக்கிறேன். முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அம்மா, யானைகளை முதுமலை காட்டிற்கு அனுப்பி மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சி அளிப்பது போல, இவர்களையும் வெளியூருக்கு அனுப்பினால் மன அழுத்தம் சரியாகிவிடும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தார்.

மேலும், திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.அனிதாராதாகிருஷ்ணன் அரசை விமர்சிப்பது, தமிழகத்தில் தற்போதைய ஆட்சி தொடருமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடாக இருப்பதாகவும், அரசை விமர்சிப்பவர்களை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சி செய்தும், மக்களுக்கு அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தரவில்லை என்றும், தற்போதைய அரசு அனைவருக்கும் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் 73 ஆயிரம் குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில், தமிழக முதல்வர் விஜய் முன்னறிவிப்பின்றி திடீரென அதிரடி ஆய்வு மேற்கொண்டு, விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், தங்கும் அறைகளின் சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதேபோல் முதல்வர் மருத்துவமனைக்கும் ஆய்வு செய்தார். முதல்வர் தமிழகத்தில் 50 ஆண்டுகள் வரலாற்றை மாற்றி காட்டுவார்.

பொன்மேனி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர், ஜல் ஜீவன் திட்டம், மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக புகார்கள் வருவதாகவும், அதிகாரிகளுடன் ஆலோசித்து அவற்றுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். தங்கபாண்டி உறுதியளித்தார்.