ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளான இன்று ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். இதனையொட்டி சேலம் கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி அக்ஷதா தனது கலைத்திறன் மூலம் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும் என்பதை அக்ஷதா என்ற மாணவி நிரூபித்துள்ளார். ஆசிரியர்களைப் போற்றும் விதமாக கொரோனா ஊரடங்கு நேரத்தில் தான் மேற்கொண்ட தனித்திறன் பயிற்சி வாயிலாக 610 சதுர அடி பரப்பளவில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஓவியத்தை வரைந்து அந்த ஓவியத்திற்கு வண்ணம் கொடுத்துள்ளார். இரண்டு மணி நேரம் 15 நிமிடத்தில் 510 தாள்களை பயன்படுத்தி இந்த படைப்பை அவர் உருவாக்கி அசத்தினார்.
மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் ஆசிரியர்களின் பெருமையை போற்றும் விதமான மாணவி அக்ஷதாவின் இந்த முயற்சியை வர்ச்யூ உலக சாதனை புத்தகம் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது.