சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக பழைய ஒய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி அமைதியான முறையில் நடைபயணம் மேற்கொண்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி மக்களை நோக்கிய நடைபயணம் மதுரை மாவட்ட எல்லையில் துவங்கி மாவட்ட அலுவலகம் வரை பெருந்திரளாக சென்று முறையிடுவது என சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில மைய முடிவின்படி நேற்று காலை 11.00 மணிக்கு மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலகம் முன்பிருந்து மக்களை நோக்கி நடைபயணம் துவங்கியது. இந்த நடைபயணம் 17.11.2022-இல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிப்பதாக திட்டமிட்டுருந்தனர்.
இந்நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான முறையில் நடைபயணம் மேற்கொண்ட ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இதுகுறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன் கூறும் போது…பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தி மக்களை நோக்கிய நடைபயணம் கள்ளிக்குடியில் துவங்கிய போதே போலீசார் எங்களை தடுத்தனர். மேலும் நடைபயணத்திற்கு அனுமதி கோரி மனு அளித்த போது அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான முறையில் மக்களை சந்தித்து வலியுறுத்தி இறுதியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபயணத்தை முடிப்பதாக திட்டமிட்டிருந்தோம் அனால் போலீசார் அதற்கு அனுமதியில்லை என கூறி திருப்பரங்குன்றம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கைது செய்தனர் என்றார்.
முன்னதாக நடைபயணத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சரவணன் தலைமையேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் மு.சுப்பிரமணியன் நடைபயண இயக்கத்தை துவங்கி வைத்தார். தமிழ்நாடு சுகாதாரப் போக்குவரத்துத் துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் நடராஜன், தமிழ்நாடு சாலைப் பராமரிப்பு ஊழியர் சங்க மாநில பொருளாளர் பரமேஸ்வரன், மதுரை மாநகராட்சி ஆசிரியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர் முருகன் ஆகியோர் கருத்துரையாற்றினர் .அமைதியான முறையில் நடைபயணம் சென்ற ஆசிரியர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.