• Wed. Apr 24th, 2024

பஞ்சாப் சம்பவத்தை வைத்து தமிழகத்துக்கு ஆபத்து?

பாஜக அரசு டெல்லியை போல் அனைத்து மாநிலங்களையும் மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

அனைத்து மாநில காவல்துறையையும் இனி ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கீழ் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அலர்ட் கொடுக்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி கார் மேம்பாலத்தில் 15 நிமிடம் நிறுத்திவைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். தொடர்ந்து, மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, பிரதமர் மோடி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, விவசாயிகள் போராட்டம் காரணமாக பிரதமரின் கான்வாய் மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கும் மேலாக நின்றது. அதன் தொடர்ச்சியாக, மீண்டும் விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு சென்றார். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

தன்னை உயிருடன் செல்ல அனுமதித்ததற்காக நன்றி என மோடி அங்கிருந்த அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு சென்றதாக அப்போதே தகவல் வெளியானது.

இந்த சம்பவம் தான் கடந்த சில தினங்களாக தேசிய அளவில் முக்கிய விவாதப் பொருளானது. பிரதமருக்கு முறையான பாதுகாப்பு வழங்கவில்லை என பஞ்சாப் மாநில அரசை பாஜக குற்றம் சாட்டுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்து விட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர பாஜக சதி செய்வதாக அம்மாநில முதல்வர் சரஞ்சித் சிங் சென்னி குற்றம் சாட்டியுள்ளார். மோடி கலந்துகொள்வதாக இருந்த பொதுக்கூட்டத்திற்கு மக்கள் வரவில்லை. எனவே கூட்டத்தை ரத்து செய்ய நடத்தப்பட்ட ஸ்டண்ட் என்றும் காங்கிரஸ் கட்சியினர் கூறினர்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க பாஜக இதை காரணமாக வைத்து முக்கிய திட்டம் ஒன்றை தீட்டி வருவதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. “ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தேர்தல் என பாஜக தொடர்ந்து கூறிவருகிறது. மாநில அரசின் அதிகாரங்களை குறைப்பதற்கான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறது.

ஜிஎஸ்டிக்குப் பின்னர் மாநிலங்களின் வரி வருவாயும் ஒன்றிய அரசு மனது வைத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதன் அடுத்தகட்டமாக மாநில அரசுகளின் கீழ் உள்ள காவல் துறையையும் டம்மியாக்கும் வேலை நடைபெற உள்ளது. டெல்லி தனி மாநிலமாக இருந்தாலும் அதன் காவல்துறை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ்தானே வருகிறது. அதேபோல் அனைத்து மாநில காவல்துறையையும் மாற்ற திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதனால் மாநில அரசிடம் இருக்கும் மிகக் குறைந்த அதிகாரமும் பறிக்கப்படும். இதற்கான வேலைகளை பஞ்சாப் சம்பவத்தை காரணமாக வைத்து மோடி அரசு தொடங்கியுள்ளது” என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *