ஒடிசா மாநில பல்கலைக்கழகத்தில் தமிழக மனித உரிமை ஆர்வலர்கள் மீது கொலை வெறி தாக்குதல்.பல் சமய பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெபசிங் கண்டனம்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒடிசாவில் ஏபிவிபி மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளால் தமிழக மனித உரிமைக் காப்பாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள உத்கால் பல்கலைக்கழகத்தில் 12.2.23, இந்திய அரசமைப்புச் சட்டமும் சனநாயகமும் என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்காக கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வை ஒடிசா மாநிலத்தில் செயல்படும் சிட்டிசன் போரம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரதிப்தா ஏற்பாடு செய்திருந்தார்.
நிகழ்வில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள், குடிமைச் சமூக அமைப்பினர், கல்வியாளர்கள் பங்கேற்றனர். துவக்க உரையாற்றிய ஜே.என்.யூ பேராசிரியர் . சுரஜ்சித்மஜீந்தார் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய சாராம்சங்களை மையப்படுத்திப் பேசினார் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் எழுந்து பலத்த குரலில் குறுக்கீடு செய்து கூச்சலிட்டு பேச விடாமல் தடுத்தார். ஒருங்கிணைப்பாளர் பிரதிப்தா அந்த நபரிடம் கேள்வி நேரம் தனியே இருக்கிறது உங்கள் கருத்தை அப்போது தெரிவிக்கலாம் என கூறினார்.உடனே மற்றொருவர் பலத்த குரலில் இது போன்ற கூட்டம் பல்கலைக்கழகத்தில் நடத்தக் கூடாது என கூச்சலிட்டுக் கொண்டு மேடை நோக்கி முன்னேறி தொலைபேசி வாயிலாக சில வெளி நபர்களை அழைத்து வந்து மிரட்டும் வகையில் பேசி மேடையில் உள்ள நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை கடுமையாக தாக்க துவங்கினர். அவர்கள் தங்களை ஆர் எஸ் எஸ் மற்றும் ஏபிவிபி அமைப்பினர் என்றும் வெளிப்படையாக கோஷமிட்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பிரதிப்தா, பேரா.சுரேந்திர சேனா ஆகியோரை கொலை வெறியுடன் தாக்குதல் நடத்திய அந்த கும்பல்களை தடுக்க சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த மனித உரிமைக் காப்பாளர் வழக்கறிஞர்.பிரிட்டோவையும் அந்த கும்பல் தாக்கி அரங்கத்தை விட்டு பலவந்தமாக வெளியேற்றி மிரட்டி உள்ளனர்.அந்த கும்பலின் தாக்குதலை தனது கைப்பேசியில் காட்சிப்படுத்திக் கொண்டிருந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் கணேசனின் கைப்பேசியை அபகரித்து அவரையும் தாக்கி உள்ளனர்.கூட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் நடைபெற்ற கலவரத்தை உணர்வற்று அமைதியாக வேடிக்கை பார்த்த நிலை தான் மிகவும் கவலையளித்தது.
தமிழ்நாட்டை சேர்ந்த மனித உரிமைக் காப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோ தாக்கப்பட்ட சம்பவம் ஒட்டு மொத்த சமூக செயற்பாட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்திய அளவில் தமிழக நலன்களுக்காக புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு என தமிழக மாணவ , மாணவிகளின் நலன் சார்ந்து பல்வேறு முக்கியமாக போராட்டக் களங்களை தலைநகர் டெல்லி வரை சென்று முன் எடுத்து நடத்தியவர். வழக்கறிஞர் பிரிட்டோ அவரை தாக்கிய காவிக் கும்பல் ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளை தாக்கியதாகவே கருதப்படுகிறது.
இந்திய அரசமைப்பு சட்டத்தினை பற்றி பேசுவதற்கே சனநாயக நாட்டில் இடமில்லா சூழலும் தொடர் அச்சுறுத்துதலும் பிஜேபி ஆளாத மாநிலமான ஒடிசாவில் ஏற்பட்டுள்ளது மோசமான முன் உதாரணமாக உள்ளது.
இது போன்ற ஒரு நிலை எந்த ஒரு காலகட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு வருவதை தடுக்க சனநாயக அமைப்புகள் , இயக்கங்கள் , அரசியல் கட்சிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இவ்வாறு பல் சமய பணிக்குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஜெபசிங் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.