• Sat. Feb 15th, 2025

ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு குழு அமைப்பு

Byவிஷா

Feb 5, 2025

ஜாக்டோ-ஜியோ போராட்ட அறிவிப்பின் எதிரொலியாக, ஓய்வூதியத்திட்டம் குறித்து ஆராய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ ஜியோ, திமுக கொடுத்த பழைய ஒய்வூதியம் திட்டம் வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், அதை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைககளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்து உள்ளது. அதன்படி பிப்ரவரி 14ஆம் தேதி வட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம், பிப்ரவரி 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் என்றும், இதற்கும் அரசு செவிசாய்க்கா விட்டால், தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கூறி உள்ளனர்.
இந்த நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராயக் குழு அதிகாரிகளைக்கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்ததுதுள்ளது.
தமிழகத்தில் தற்போது சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதனிடையே பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
24.01.2025 அன்று மத்திய அரசும் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத்தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 01.04.2003 முதல் மாநில அரசுப் பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே வேளையில் ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் 1.01.2004 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளர்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது. எனினும் மாநில அரசுப்பணியாளர்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தை செயல்படுத்திட வேண்டி தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், 24.01.2025 அன்று ஒன்றிய அரசும் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட கீழ்க்காணும் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

  1. ககன்தீப்சிங் பேடி. இ.ஆ.ப. கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை. 2. டாக்டர்.கே.ஆர்.சண்முகம், முன்னாள் இயக்குநர், 3. பிரத்திக் தாயன். இ.ஆ.ப. துணைச் செயலாளர் (வரவு செலவு), நிதித் துறை, உறுப்பினர் செயலர். இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையினை ஒன்பது மாதங்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.