• Thu. Apr 25th, 2024

சிறந்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலில் தொடந்து தமிழ்நாடு முதலிடம்

ByA.Tamilselvan

Dec 16, 2022
TN Government

இந்தியா டுடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் மொத்த மாநிலங்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கான பட்டியலில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து தமிழகம் இந்த ஆண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியா டுடே நிறுவனம் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஸ்டேட் ஆப் ஸ்டேட்ஸ் என்ற பெயரில் மாநிலங்களின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகளை பட்டியலிட்டு அதற்கான தரவரிசை பட்டியலை வெளியிடும். இந்த ஆண்டு வெளியிட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக தமிழகம் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 1, 312 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இமாச்சல பிரதேசமும், 1,263 புள்ளிகளுடன் கேரளம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. பொருளாதாரம், உட்கட்டமைப்பு வசதி, மருத்துவம், விவசாயம், கல்வி, சட்டம் ஒழுங்கு, ஆளுமை, ஒருமித்த வளர்ச்சி, தொழில் முனைவு, சுற்றுலா, சுற்றுச்சூழல், சுகாதாரம் ஆகிய பிரிவுகளில் இந்தியா டுடே நிறுவனம், பெரிய மற்றும் சிறிய மாநிலங்களை பட்டியலிட்டது. மொத்தம் 2,080 புள்ளிகளில், தமிழ்நாடு 1,321.5 புள்ளிகளை பெற்று 5வது ஆண்டாக முதலிடத்தை பிடித்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தை பிடித்துள்ள குஜராத்துக்கு அடுத்தபடியாக 2வது இடத்தை தமிழ்நாடு எட்டிப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாடு இந்த பிரிவில் 4வது இடத்தில் இருந்தது. முதலிடத்தை பிடித்த தெலுங்கானா 3வது இடத்திற்கு இந்த ஆண்டு தள்ளப்பட்டுள்ளது.
மருத்துவத்தில் முதலிடத்தில் கேரளா உள்ளது. கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சுகாதாரத்தில் கடந்த ஆண்டு 7வது இடத்தில் இருந்த தமிழ்நாடு 3வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது.
சிறப்பான கல்வியில் கடந்த ஆண்டு 5வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு நான்காவது இடத்தை பிடித்துள்ளது. சிறந்த ஆளுகை பிரிவில் கடந்த ஆண்டு 8வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு 6வது இடத்தை பிடித்திருக்கிறது. சிறந்த உட்கட்டமைப்பு வசதியில் கடந்த ஆண்டு 4வது இடத்தில் இருந்த தமிழ்நாடு இந்த ஆண்டு 3வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் மாநிலம் 280 புள்ளிகளுக்கு 205 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.
ஒட்டுமொத்த வளர்ச்சியில் முதலிடத்தை தக்க வைத்துள்ள தமிழக அரசை வெகுவாக பாராட்டியுள்ள இந்தியா டுடே நிறுவனம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையின் கீழ் தமிழ்நாடு சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளதாக புகழாரம் சூட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *