கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுடன், ஆந்திர மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவையில் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். தேர்தல் வாக்குறுதிப்படி, கடந்த டிசம்பர் மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்திருந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக அமைச்சரவை மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை அண்மையில் கூண்டோடு கலைக்கப்பட்டது.
நாளை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜாவுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது உறுதியாகியுள்ளது.