• Tue. Apr 23rd, 2024

பழமுதிர்சோலையில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார விழா

Byகுமார்

Nov 10, 2021

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவிலில் உள்ள முருகனின் ஆறாவது படைவீடு என்று அழைக்கக்கூடிய பழமுதிர்சோலை முருகன் கோவிலில் கடந்த 04ம் தேதி கந்தசஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இதனையொட்டி சஷ்டி விரதம் இருக்கும் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தினை தொடங்கிய நிலையில், கோரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது

இதனையொட்டி பழமுதிர்சோலை முருகப்பெருமான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் விழாவின் முக்கிய நாளான இன்று சூரப்பத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதற்காக வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் வெள்ளிவேல் கொண்டு கஜமுகாசுரன், மற்றும் சூரபத்மனை வதம் செய்தார், பழமுதிர்சோலையில் உள்ள நாவல் மரத்தடியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது கூடியிருந்தவர்கள் அரோகரா, சண்முக, வெற்றிவடிவேலா, என எழுப்பிய கோஷங்கள் அழகர்கோயில் மலையில் அழகாக எதிரொலித்தது.

இதனைத் தொடர்ந்து வெற்றி முகத்துடன் கோவில் திரும்பிய முருகப் பெருமானுக்கு மலர்தூவியும், சூரனை வதம் செய்த வெள்ளிவேலுக்கு பாலாபிஷேகம் செய்து தீபாதரனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வனைக்கு 11 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றதை தொடர்ந்து, இன்று திருக்கல்யாண மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது.

விழாவையொட்டி திருக்கோயில் ஆணையாளர் அனிதா தலைமையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *