• Tue. Apr 16th, 2024

கோடை விடுமுறை எதிரொலி..,திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

Byவிஷா

May 13, 2023

கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரி மாவட்டம், திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
கோடைவிடுமுறை காரணமாக மக்கள் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று விடுமுறையை உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். அதேபோல் திற்பரப்பு அருவியில் குளிக்கவும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது 2 நாட்களாக மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து அருவியில் மிதமாக கொட்டி வருகிறது. மேலும் கோடைவெயிலே தெரியாத அளவுக்கு மேகம் சூழ்ந்த நிலையில் ரம்மியமாக உள்ளது. இதனால் நேற்று அங்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் இதமான சூழலை அனுபவித்ததோடு உற்சாகமாக அருவியில் ஆசைதீர குளித்தனர். மேலும் சிறுவர், சிறுமிகள் நீச்சல் குளத்திலும் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். அதே சமயத்தில் ஏராளமான வாகனங்களில் மக்கள் குளிக்க வந்ததால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே அந்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான இடவசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
திற்பரப்பு அருவியில் குளித்து முடித்ததும் சுற்றுலா பயணிகள் தடுப்பணை பகுதிக்கு சென்று படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பின்னர் மாத்தூர் தொட்டிப்பாலத்தின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு நடந்து இயற்கையையும், தொட்டிப்பாலத்தின் அழகையும் ரசித்தனர். சிலர் பாலத்தின் கீழே ஓடிய ஆற்றில் குளித்து மகிழ்ந்ததையும் காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் திற்பரப்பு, மாத்தூர்தொட்டிப்பாலம் பகுதியில் வியாபாரமும் களை கட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *