தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்
முகமது மீரான் ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது
இஸ்லாமியர்களின் இடஒதுக்கீடு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பு குறித்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்!

இஸ்லாமிய மதத்திற்கு மாறுபவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்களுக்கான (BCM) இடஒதுக்கீட்டுச் சலுகையைக் கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையை (G.O. Ms. No.31, 09.03.2024) சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி ரத்து செய்துள்ளனர்.
தனக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று ஷமீர் அஹமது என்பவர் தொடர்ந்த வழக்கில், மனுதாரரின் கோரிக்கையைத் தாண்டி, ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் பாதிக்கும் வகையில் அரசாணையை ரத்து செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் ஆளும் தவெக அரசின் சார்பில் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள், இஸ்லாமிய சமூகம் நீண்டகாலமாகப் போராடிப் பெற்ற உரிமையைப் பாதுகாக்கும் வகையில் அமையவில்லை என்பதும் வேதனைக்குரியது.

தமிழ்நாடு அரசு 2024 மார்ச் 9-ஆம் தேதி வெளியிட்ட அரசாணையின்படி, BC, MBC, DNC மற்றும் SC பிரிவைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினாலும், அவர்கள் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுப் பலன்களை தொடர்ந்து பெறலாம் என்றும், தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஏழு முஸ்லிம் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த அரசாணை இஸ்லாமியர்களின் பன்னெடுங்கால போராட்டங்களும் தொடர் கோரிக்கைகளும் காரணமாக கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட முக்கியமான உரிமையாகும்.
ஆனால், தற்போது அந்த அரசாணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை, இஸ்லாமிய மதத்திற்கு மாறுவதை மறைமுகமாகத் தடுக்கும் ஒரு வழிமுறையாக அமைகிறது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானதாகும்.
தீர்ப்பில், இஸ்லாத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை என முஹம்மது நபி (ஸல்) அவர்களின் போதித்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், தற்போது இஸ்லாத்தில் உள்ள பெரும்பான்மையினரும், இஸ்லாத்தைத் தழுவுபவர்களும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இடஒதுக்கீடு என்பது சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஒரு சமூகநீதிசார் உரிமையாகும்.

எனவே, இந்த உரிமையை அவசரகதியில் பறிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு கண்டனத்திற்குரியது.
இந்த முக்கியமான தீர்ப்பு குறித்து இதுவரை ஆளும் தவெக அரசும், இந்த அரசில் நேரடியாகவும் வெளியிலிருந்தும் அங்கம் வகிக்கும் விசிக, IUML மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, இவ்வழக்கை உரிய முறையில் கையாளத் தவறியதால் இஸ்லாமியர்களின் முக்கியமான இடஒதுக்கீட்டு உரிமை பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை நீக்கும் வகையில், தமிழக அரசு உடனடியாக இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, இஸ்லாமியர்களின் அரசியலமைப்புச் சட்டப்பூர்வ உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்குவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்து, நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் நிலுவையில் உள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களிடம் இதுபோன்ற மதம் தொடர்பான வழக்குகள் தொடர்ந்து ஒதுக்கப்படுவது, நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் சூழலை உருவாக்கக்கூடும்.
எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவர்கள், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு ஒதுக்கப்படும் இத்தகைய வழக்குகள் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் முகம்மது மீரான்
தெரிவித்துள்ளார்.



