அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் தி.மு.க., அரசை கண்டித்து, தேனி பங்களா மேடு பகுதியில் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் பத்து நிமிடத்தில் ‘சட்டென்று’ முடிந்தது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பாக தமிழகம் முழுவதும் இன்று (பிப்.28) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க., தலைமை அறிவித்தது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பாக மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் தேனியில் உள்ள பங்களாமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் துவங்கிய பத்து நிமிடங்களில் தி.மு.க., அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியதுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்ததாக கூறப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் வந்த வழியாக திரும்பிச் சென்றதை காண முடிந்தது.