• Fri. Apr 26th, 2024

செல்வமணி அணி வென்றது எப்படி?

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இன்று நடத்தப்பட்ட தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு மீண்டும் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி 389 வாக்குகள் வித்தியாசத்தில் 955 வாக்குகள் பெற்று தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கே.பாக்யராஜ் 566 வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைவடந்ததையொட்டி, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 24-ம்தேதி நடைபெறவிருந்தது. அப்போது கொரோனா பரவல் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு 27.02.2022 அன்று சென்னை கேகே நகரில் சத்யா மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் மொத்தம் 2600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் வாக்குரிமை உள்ளவர்களாக 1900 பேர் உள்ளனர். இன்று நடத்தப்பட்ட தேர்தலில் 100 தபால் ஓட்டுகள் உள்பட மொத்தம் 1520 வாக்குகள் பதிவாகின.

இந்த தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைவராக போட்டியிட்ட புதுவசந்தம் அணி சார்பாக பொது செயலாளராக ஆர்.வி.உதயகுமார்,(966 வாக்குகள்) பொருளாளராக (928 வாக்குகள்) இணை செயலாளர்களாக 1.சுந்தர்.சி, 2.A.R.முருகதாஸ், 3.லிங்குசாமி, 4.ஏகம்பவாணன்,

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு
1.நம்பிராஜ், 2.ஆர்.கே.கண்ணன், 3.ரவிமரியா, 4.ரமேஷ்கண்ணா, 5.மனோஜ்குமார், 6.ஏ.வெங்கடேஷ், 7.மனோபாலா, 8.சரண், 9.கிளாரா, 10.முத்து வடுகு, 11.ரமேஷ் பிரபாகரன், 12.திருமலை போட்டியிட்டஇவர்கள் அனைவரும் வெற்றிபெற்றுள்ளனர்

கே.பாக்யராஜ் தலைவராக போட்டியிட்ட இமயம் அணி சார்பில், செயலாளர் பதவிக்கு ஆர்.பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட்பிரபு போட்டியிட்டனர். இணைச்செயலாளர்கள் பதவிக்கு ராஜா கார்த்திக், விருமாண்டி, ஜெகதீசன், ஜெனிபர் ஜூலியட் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆர்.பாண்டியராஜன், மங்கை அரிராஜன், வேல்முருகன், சசி, பாலசேகர், வி.பிரபாகர், சாய்ரமணி, நவீன், சிபி, நாகேந்திரன், ஜெகன் ஆகியோர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் போட்டியிட்டனர் இவர்கள் அனைவரும் தோல்வியடைந்துள்ளனர்

இதன் மூலம் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு ஏற்கனவே நிர்வாகிகளாக இருந்தவர்களை மீண்டும் தேர்தல் மூலம் தேர்வு செய்துள்ளனர். பொதுவாக திரைப்பட துறை சார்ந்த சங்கங்களில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கும். ஆனால் இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் அப்படி எதுவும் இல்லை என்பது ஆறுதலான விஷயம். தேர்தல் நடைமுறை தொடங்கிய பின் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தை கே.பாக்யராஜ் மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் R.K.செல்வமணியை போர்ஜரி நபர், அவர் பெயரில் வந்த படங்களை அவர் தான் இயக்கினாரா என சந்தேகம் வந்துவிட்டது என கூறினார்.

இதற்கு வெற்றிபெற்றால் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை கூறி வாக்கு கேளுங்கள் உங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது தேர்தலுக்காக தரம்தாழ்ந்து பேசவேண்டாமே என மென்மையாக R.K.செல்வமணி கூறிய பதில் கே.பாக்யராஜ் அணிக்கு பின்னடைவாக அமைந்தது என்கின்றனர். இயக்குநர்கள் வட்டாரத்தில் R.K.செல்வமணி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல அவர்மீது குற்றசாட்டுக்கள் இருக்கிறது. இருந்தபோதிலும் பெப்சி தலைவராக, இயக்குநர்கள் சங்க தலைவராக அவர் இருந்தாலும் உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைக்காக அவரை தொடர்புகொள்வது எளிது. நள்ளிரவு கடந்தாலும் பிரச்சினைக்குரிய இடங்களுக்கு நேரில் வரக்கூடியவர். கொரோனா காலத்தில் உறுப்பினர்களுக்கு தன்னம்பிக்கையும், நிவராணங்களும் கிடைப்பதற்கு களத்தில் இறங்கி பணியாற்றிய களப்போராளிகள் என்பதால்தான் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை R.K.செல்வமணி தலைமையில் போட்டியிட்ட அனைவராலும் பெற்று வெற்றிபெற முடிந்தது என்கின்றனர், இயக்குநர்கள் வட்டாரத்தில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *