• Sat. Apr 20th, 2024

திடீர் திருப்பம்! அமைச்சரின் மனைவி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டி!

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மனைவி சைதானி பீவி, வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். தமிழக அரசியல் வரலாற்றில் அமைச்சர் ஒருவரின் மனைவி பேரூராட்சி வார்டு மெம்பர் பதவிக்கு போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும். அமைச்சர் மஸ்தானின் மகன் மொக்தியார் மஸ்தான் என்பவரும் அதே செஞ்சி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சியிலும் சரி எதிர்க்கட்சியிலும் சரி முக்கியப் பிரமுகர்கள் குடும்பங்களில் இருந்து பலர் இந்த தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மனைவி சைதானி பீவி செஞ்சி பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இதேபோல் இவரது மகனும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார். பொதுவாக அமைச்சராக இருப்பவரது வாரிசுகள் சட்டமன்றத் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ தான் போட்டியிட ஆர்வம் காட்டுவார்கள். பேரூராட்சி அளவுக்கு போட்டியிடுவதை தங்களுக்கான பிரஸ்டீஜ் பிராப்ளமாக கருதுவார்கள். ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அமைச்சர் ஒருவரது மனைவியும், மகனும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு வெவ்வேறு வார்டுகளில் போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.

செஞ்சி பேரூராட்சியை பொறுத்தவரை ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அமைச்சர் மனைவி சைதானி பீவி வெற்றிபெற்றாலும் கூட கவுன்சிலராக மட்டுமே இருக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும் கவுன்சிலராக இருப்பதை கவுரவக் குறைச்சலாக கருதாமல் இந்த தேர்தலில் துணிந்து போட்டியிட முன் வந்திருக்கிறார் அமைச்சர் மஸ்தானின் மனைவி. அமைச்சரின் மகன் மட்டுமே தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில் இருந்த நிலையில் திடீர் திருப்பமாக அமைச்சரின் மனைவியும் நேற்று கடைசி நாளில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

20 ஆண்டுகள்
அமைச்சராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் ஆவதற்கு முன்பாக செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்தவர் செஞ்சி மஸ்தான். அரசியலில் அமைச்சர் பதவி வரை தன்னை உயர்த்தி விட்ட அந்த பேரூராட்சிக்கு தற்போது நடக்கும் திமுக ஆட்சியில் மேலும் நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பது மஸ்தானின் விருப்பம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *