• Fri. Mar 29th, 2024

ஓவைசி மீதான துப்பாக்கிச் சூடு தாக்குதல் குறித்து அமித்ஷா இன்று விளக்கம்

உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தின் போது மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று நாடாளுமன்றத்தில் விளக்கம் தர உள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் போட்டியிடுகிறது. மொத்தம் 100 தொகுதிகளில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி போட்டியிடுகிறது.

மஜ்லிஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஓவைசி தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் உ.பி.யின் மீரட் நகரில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு டெல்லி நோக்கி ஓவைசி திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது சாஜர்சி சுவங்க சாவடி அருகே 4 பேர் கொண்ட மர்ம கும்பல், ஓவைசி கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஓவைசி உயிர் தப்பினார்.

ஓவைசி மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். உ.பி. தேர்தல் களத்திலும் ஓவைசி மீதான தாக்குதல் விவாதப் பொருளாக முக்கிய இடம் பிடித்தது. இத்தாக்குதல் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஓவைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் இதனை ஓவைசி நிராகரித்தார். இது தொடர்பாக லோக்சபாவில் பேசிய ஓவைசி, நான் மரணத்தை நினைத்து அச்சப்படவில்லை. எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு தேவை இல்லை. இசட் பிரிவு பாதுகாப்பை நான் நிராகரிக்கிறேன். என் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்காக நான் அமைதியாக இருக்கப் போவது இல்லை. வெறுப்பு மற்றும் அரசியல் தீவிரவாதத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

இந்நிலையில் ஓவைசி மீதான தாக்குதல் தொடர்பாக இன்று காலை 11.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் தர இருக்கிறார். இந்த விளக்கத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 1 மணிநேரம் ஒத்திவைக்கப்பட உள்ளது. லதா மங்கேஷ்கர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று காலமானார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தி இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *