• Fri. Apr 19th, 2024

சுகாதாரத் துறைச் செயலாளர் திடீர் மாற்றம்: பரபரப்பு தகவல்..!

Byவிஷா

Jun 13, 2022

கொரோனாவை சிறப்பாக கையாண்ட தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட 50 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் பல வருடங்களாக இருந்து வருகிறார். கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணனை திடீரென மாற்றி பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டார். கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு திமுக அரசு பதவியேற்றது. அப்போதே சுகாதாரத்துறை செயலாளர் மாற்றப்படுவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. இருப்பினும் ராதாகிருஷ்ணன் சுகாதாரத் துறைச் செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வந்தார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணிகளை செய்ததால் பொது மக்கள் இடத்திலும் இவருக்கு நல்ல பெயரும், பாராட்டும் கிடைத்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று கணிசமாக குறைக்கப்பட்டதற்கு இவருக்கும் பங்கு உண்டு.
இந்நிலையில், தமிழகத்தில் 50 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டற்கான காரணம் வெளியாகியுள்ளது. அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சுகாதாரத் துறையில் முறைகேடுகள் நடப்பதாகச் சில தகவல்களை எடுத்துவைத்தார். 2ம் கட்ட அதிகாரிகள் மூலமே அந்தத் தகவல்கள் அண்ணாமலைக்குக் கிடைத்ததாகவும், ராதாகிருஷ்ணனால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அதனால்தான் அவர் மாற்றப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *