வெளிநாட்டில் இருந்து போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் தமிழகத்துக்கு வந்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடியில் ‘லிப்ட்’ மற்றும் தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது. இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் சைலேந்திரபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- போதை பொருட்களை ஒழிக்க தமிழக காவல் துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா வேட்டை 3 பகுதிகளாக இதுவரை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டினரும் கைதாகி உள்ளனர். மீண்டும் ஒரு சிலர் வந்திருக்கலாம் என்கிற செய்தி வந்துள்ளது. அது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. அதுபோன்று வெளிநாட்டில் இருந்து போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் தமிழகத்துக்கு வந்திருப்பது தெரியவந்தால் அவர்களை உடனடியாக கைது செய்வோம். சந்தேக நபர்கள் அனைவரையும் கண்காணித்து வருகிறோம் என்றார்.