
போலீசாரின் சோதனையில் இருந்து தப்பித்து கொள்வதற்காக பலர் பிரஸ், ஊடகம் என காரின் முன்பகுதியில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டிச்சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை சந்திப்பான மாமல்லபுரம் பூஞ்சேரி கூட்ரோடு பகுதியில் மாமல்லபுரம் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பலர் மது குடிப்பதற்காக சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரி நோக்கி சென்றனர். பூஞ்சேரி சோதனை சாவடியில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற வாகனங்களை ஒவ்வொன்றாக நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது போலீசாரின் சோதனையில் இருந்து தப்பித்து கொள்வதற்காக பலர் பிரஸ், ஊடகம் என காரின் முன்பகுதியில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டிச்சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. 4 கார்களில் ஒட்டப்பட்டிருந்த போலி ஸ்டிக்கர்களை போலீசார் கிழித்து எறிந்தனர். அந்த கார்களுக்கு மொத்தம் ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
