• Sat. Apr 26th, 2025

ஸ்டாலின் உள்துறை பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்- ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

ByKalamegam Viswanathan

Feb 16, 2025

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு உள்ளது. ஸ்டாலின் உள்துறை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், பூத் கமிட்டி வாரியாக கிளை கழக புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கச்சராயிருப்பு, மேலக்கால், திருவேடம் ஆகிய பகுதியில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், கருப்பையா, மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, தனராஜன், மாவட்ட பொருளாளர் திருப்பதி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட கலைபிரிவு செயலாளர் ரகு, பேரூர் கழக செயளாலர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், கேபிள் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


முன்னதாக, சோழவந்தானில் மறைந்த தலைமை கழக பேச்சாளர் பட்டணம் நைனா முகமது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி குடும்ப நலநிதியை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர். பி.உதயகுமார் வழங்கினார்

ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது..,

இந்தியாவில் எந்த கட்சியில் இல்லாத வகையில் பூத் வாரியாக கிளைக் கழங்களை எடப்பாடியார் அமைக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி தமிழக முழுவதும் கழக ரீதியில் உள்ள 82 மாவட்டங்களில் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த அடித்தளத்தை நாம் சிறப்பாக அமைத்தாலே எடப்பாடியார் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது, தொடர்ந்து இந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் மக்கள் பணி, தேர்தல் பணி,கழகப் பணி ஆகியவை சிறப்பாக செய்திட வேண்டும்.

குறிப்பாக வாக்காளர்கள் பட்டியலில் தவறு இருந்தால் நீங்கள் திருத்தம் செய்ய வேண்டும். அதேபோல் மக்களிடத்தில் நீங்கள் நேரடியாக தொடர்பு கொண்டு இருக்க வேண்டும், குறிப்பாக அம்மா அரசு செய்த சாதனை திட்டங்களையும், திமுக அரசால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் மக்களிடத்தில் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் ஆகியோர் ஆட்சி காலங்களில் தமிழக காவல்துறை இங்கிலாந்து ஸ்காட்லாந்து காவல்துறைக்கு நிகராக இருந்தது தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் திமுக ஆட்சியில் தமிழகம் அமளிக்காடாக மாறிவிட்டது தமிழகத்தில் பள்ளியில் படிக்கும் மாணவிகள் முதல், கல்லூரியில் படிக்கும் மாணவிகள் வரை பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளது தமிழகத்தில் பாலியல் தொல்லை நடக்காத நாடு இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது .

குற்றங்களை காவல்துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை, கண்டுபிடிக்கும் சமூக ஆர்வலர்களின் ஆயிளுக்கு பாதுகாப்பு இல்லை, மொத்தத்தில் குற்றவாளிகள் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டது.

தமிழகத்தில் அச்சப்படுகின்ற, அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளது என்ற எல்லோர் மனதிலும் வேதனை கொழுந்து விட்டு இருக்கிறது, கள்ளச்சாராயம் காய்ச்சுவோரை காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை, காவல்துறை கண்டிக்கவும் இல்லை

ஆனால் கள்ளச்சாரய காய்ச்சிவோரை பற்றி தகவல் சொன்னால் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகிவிட்டது, மொத்தத்தில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை சரியில்லை.

இன்றைக்கு உள்துறையை கையில் வைத்திருக்கும் ஸ்டாலின் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் கூறுகிறார்கள். ஆகவே ஸ்டாலின் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய முன்வருவாரா? என கேள்வி பேசினார்.