

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு உதவ தமிழக சட்டசபையில் இன்று சிறப்பு தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழியவுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் வரலாறு காணாத விலையேற்றம் ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன .குறிப்பாக பொட்ரோல் ,டீசல் விலை உச்சத்தில் உள்ளது.ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாயை தாண்டி உள்ள நிலையில், ஒரு வேளை உணவுக்குக் கூட வழியின்றி இலங்கை மக்கள் தற்போது குடும்பம் குடும்பமாக தமிழகத்தை நாடி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேலும் மின்சார வெட்டு அதிகரித்து மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர்.
, கடந்த ஏப்ரல் 9 முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். இலங்கை நெருக்கடி கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் பதவி விலகக் கோரி, அதிபர் மாளிகைக்கு எதிரே முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பதினேழாவது நாளை எட்டியுள்ளதுது. ஆனால் ராஜபக்ச பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என கூறிவருகிறார்.
இந்நிலையில் இந்தியா சார்பில் இலங்கைக்கு டீசல் மற்றும் அரிசி அனுப்பப்பட்டது. தற்போது இலங்கைக்கு சுமார் 3800 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன் உதவிகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தமிழக அரசும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். ஆனால் இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்தவித பதிலோ, அனுமதியோ அளிக்காத நிலையில் தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்து தர வலியுறுத்தியும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. இந்த தீர்மானத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்மொழிவு அனைத்து கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

