தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சிவன் மற்றும் வைணவ கோவில்களில் தரிசன டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மார்கழி மாதம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சிவன் மற்றும் வைணவ கோவில்களில் அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இந்நிலையில், வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணத்தை குறைத்து அறிவித்துள்ளார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.
அதன்படி, பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் கட்டணம் 200 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சிறப்பு தரிசன கட்டணம் பொருளாதார நிலைக்கேற்ப படிப்படியாக குறைக்கப்படும். வைகுண்ட ஏகாதசி அன்று அனைத்து கோயில்களிலும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.