தி.மு.க. அரசு பதவியேற்ற பின்னர் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி வேளாண்மைகாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று பணை மரங்களை பாதுகாப்பது.
அதன்படி தமிழகத்தின் அரசு மரமான பனைமரத்தை அழிவில் இருந்து பாதுகாக்க தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெறுவது கட்டாயம், கருப்பட்டியை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும், பனை மேம்பாட்டு இயக்கம் ரூ. 3 கோடியில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு பனை மரம் பெருக்கு திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனை கன்றுகளையும் முழு மானியத்தொகையுடன் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேளாண்மை துறைக்கான தனிநிதிநிலை அறிவிக்கையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக வேளாண்மை துறைக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் பனை விதைகளை தனது சொந்த செலவில் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, அவரது சொந்த செலவில் ஒரு லட்சம் பனை விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று அவரது சொந்த ஊரான பணகுடி அருகே உள்ள லெப்பைக் குடியிருப்பில் நடைபெற்றது.
அப்போது, தமிழக வேளாண்மைத் துறைக்கு ஒரு லட்சம் பனை விதைகள் லாரிகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை சபாநாயகர் அப்பாவு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவை சென்னை பூந்தமல்லி செம்மொழி பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.