• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.!!

BySeenu

May 25, 2026

கோவை தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி, கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மற்றும் அவனது நண்பர்கள் 4 பேரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண் ஒருவர் கோவையில் கல்லூரியில் படித்து வந்த போது, சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்ற வாலிபருடன் பழகியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு இடையே, கார்த்திக் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பது இளம் பெண்ணுக்குத் தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கார்த்திக்குடனான பழக்கத்தை முற்றிலும் துண்டித்துக் கொண்டார். ஆனால், காதல் முறிவை ஏற்றுக்கொள்ள முடியாத கார்த்திக், தொடர்ந்து அந்த இளம்பெண்ணுக்குத் தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் கேடிஎம் (KTM) மற்றும் பல்சர் (Pulsar) ஆகிய இருசக்கர வாகனங்களில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்து உள்ளார். வீட்டின் வெளியே நின்று கொண்டு இருந்த பெண்ணின் தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

அப்போது, தாங்கள் மறைத்து வைத்து இருந்த மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பீர் மற்றும் மதுபான பாட்டில்களை வீட்டின் மீது சரமாரியாக வீசினர். இதில் ஒரு பாட்டில் வெடித்து, வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த செருப்பு ஸ்டாண்ட் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் அங்கு இருந்த கேன்வாஸ் ஷூக்கள் எரிந்து சேதம் அடைந்தன.

அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை

இச்சம்பவம் குறித்து அளித்த புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் காவல் துறையினர் கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்களை வீசி ரவுடிகள் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் தொண்டாமுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.