• Tue. Dec 10th, 2024

6 மணி நேரத்திற்கு பின் எஸ்.பி விடுவிப்பு…என்ன தான் பிரச்சனை ?

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட 9 சட்டசபை உறுப்பினர்கள் 6 மணி நேரத்திற்குப் பின்பு விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.

இதனிடையே நேற்றைய தினம் கோவை ஆட்சியர் வளாகத்தில் அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும், வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்ட திமுகவினரை வெளியேற்ற வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோவை ஆட்சியர் வளாகத்தில் அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் 9 அதிமுக எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இருப்பினும், அவர்கள் அதற்கு மறுத்ததால் 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். காந்திபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சுமார் 6 மணி நேரம் வரை அவர்கள் தங்க வைக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும், கோவையில் வெளியாட்கள் யாரும் இல்லை என மாவட்ட ஆட்சியர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ் பி வேலுமணி, “நகர்ப்புற தேர்தலை நேர்மையான முறையில் தேர்தல் நடத்திட வேண்டும் என ஜனநாயக முறையில் போராடினோம். ஆனால் காவல்துறை எங்களைக் கைது செய்துள்ளனர். தேர்தல் விதிக்கு எதிராகவும் கோவையில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். போலீசாரும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர்.

தேர்தல் அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என அதிமுகவினர் நினைக்கிறோம், ஆனால் வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்ட திமுகவினர் இன்னும் கூட வெளியேற்றப்படவில்லை. மக்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கத்தி குத்து, அடிதடி நடைபெற்று வருகிறது. தேர்தலை நேர்மையான முறையில் சந்தித்தால் வெற்றி பெற முடியாது என்பதால் குண்டர்களை வைத்தும், ஜனநாயக படுகொலை செய்யப்பட்டுத் தேர்தலை திமுகவினர் சந்திக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றமும் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் முடிவுகளைத் தாமதப்படுத்தாமல் யார் வெற்றி பெற்றார்களோ அவர்களை அறிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் முடிவுகளை மாற்றி அறிவிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. கோவைக்குச் சிறப்புத் தேர்தல் பார்வையாளராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அவருடைய செயல்பாடும் வந்தால்தான் தெரியும்” என்று அவர் தெரிவித்தார்.