• Wed. Dec 11th, 2024

பூத் மாறி ஓட்டு போட சென்ற பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனிடையே பாஜக தேசிய மகளிரணி தலைவியும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி ஸ்ரீனிவாசன் கோவை டாடாபாத் பகுதியில் உள்ள காமராஜர் மெட்ரிக் பள்ளியில் வாக்கு அளிக்க வந்தார். ஆனால் இந்தப் பள்ளியில் வாக்களிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் அருகே உள்ள சி எம் எஸ் பள்ளிக்கு சென்று வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

வானதி சீனிவாசன் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநகராட்சியில் வார்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளது. சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. நான் வாகக்களிக்க வந்த பள்ளியில் எனக்கு ஓட்டு இல்லை. அதனால் வேறொரு பள்ளியில் வாக்களித்துள்ளேன். தேர்தல் சரியான செயல்பாட்டில் இல்லை. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் கவனம் செலுத்தவில்லை. தேர்தல் நியாயமாக நடைபெறுவதிலும் கவனம் செலுத்தவில்லை என்றார்.

இந்நிலையில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வது வார்டு பகுதியில் உள்ள 314 வாக்குச் சாவடியில் உள்ள வாக்குப் பதிவு இயந்திரத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருக்கு எதிரே உள்ள பொத்தான் வேலை செய்யவில்லை. இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க முடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.