• Sun. Oct 6th, 2024

மின்சார தானியங்கி கப்பலை அறிமுகம் செய்த யாரா நிறுவனம்

Byகாயத்ரி

Nov 22, 2021

உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை அறிமுகம் செய்துள்ளது நார்வேயின் பிரபல உரத் தயாரிப்பு நிறுவனமான யாரா இன்டர்நேஷனல் .


யாரா பிர்க்லேண்ட் என்று பெயரிடப்பட்டுள்ள 80 மீட்டர் நீளமுள்ள இந்த எலெக்ட்ரிக் தானியங்கி சரக்கு கப்பல் தெற்கு நார்வேயின் போர்ஸ்கிரன்னில் உள்ள உற்பத்தி ஆலையிலிருந்து 14 கிமீ தொலைவில் பிரெவிக்கில் உள்ள ஏற்றுமதி துறைமுக முனையம் வரையிலான சரக்கு போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.


முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கப்பல் இந்நிறுவனத்தின் 40,000 டீசல் லாரி போக்குவரத்துக்கு மாற்றாக விளங்கும். இதனால் ஆண்டுக்கு 1000 டன் கார்பன் வெளியேற்றம் குறையும். இதன்மூலம் நாட்டின் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் யாரா நிறுவனத்தின் இக்கப்பல் பெரும்பங்கு வகிக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்வெய்ன் தோர் ஹோல்ஸ்தர் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறும்போது, “மின்சார மற்றும் தானியங்கி தொழில்நுட்பம் மூலம் இயங்கும் கப்பலை உலகிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்வதன்மூலம் மிகப்பெரிய மாற்றத்தின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம். இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல நீர்வழித்தடங்களில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சாத்தியங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *