• Fri. Apr 18th, 2025

நலவாழ்வு உரிமைச் சட்டத்தை நிறைவேற்ற கோரி, கையெழுத்து இயக்கம்

நலவாழ்வு உரிமைச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

சுகாதாரத்தை மக்களின் அடிப்படை உரிமையாக்கும் வண்ணம் அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அதற்கென தனியே சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற கையெழுத்து இயக்கதிற்கு மாவட்ட செயலாளர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் செந்தில் வரவேற்றுப் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் தேனி சுந்தர் தொடங்கி வைத்தார். அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ சிகிச்சையை அரசின் செலவில் வழங்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இயக்கத்தில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினர்கள் முத்துக் கண்ணன், ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆரோக்கிய உபகுழு உறுப்பினர் திலீபன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். கையெழுத்து இயக்கம் தொடர்ந்து கம்பம், தேனி என மாவட்டத்தின் பல பகுதிகளில் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்தனர்.