விருதுநகர் மாவட்டம்ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ வழிபாடு மாலை நடைபெற்றது. ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட மாயூரநாதசாமி கோயிலில் சனிப் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீர், பால், தயிர், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீர், சந்தனம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் நந்தி சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதே போல தெற்கு வெங்காநல்லூர் சிதம்பரேஸ்வரர் கோவில், சொக்கர்கோவில், ராஜபாளையம் அருகே வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரர் கோவில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரர் கோவில், உள்பட பல்வேறு சிவன் கோவில்களில்
பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.