• Tue. Dec 10th, 2024

தீவிரமாக தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்…

Byகாயத்ரி

Dec 28, 2021

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான பயிற்சியும் தீவிரமடைந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் திருநாளையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடக்கும். தூங்கா நகரம் எனப்படும் மதுரையில், சித்திரை திருவிழாவுக்கு அடுத்தபடியாக, ஜல்லிக்கட்டு மிக விசேஷமானது.

தை முதல் தேதியான பொங்கலன்று (ஜன. 14) அவனியாபுரம், மறுநாள் (ஜன. 15) பாலமேடு, 16ம் தேதி அலங்காநல்லூர் என 3 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது.வழக்கத்திற்கு மாறாக பல லட்சம் மதிப்பில் பல்வேறு பரிசுகள் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் வழங்கப்பட உள்ளன.அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோவில் உற்சவத்தில் ஒரு பகுதியாக நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவினை காண இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்குபெறுவார்கள். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி பாஸ்கரன் ஆய்வு செய்தார்.


மதுரை மாவட்டத்தில், குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்படுகின்றன. காளைகளுக்கு நாள்தோறும் நடைபயிற்சி, நீச்சல் மற்றும் மண் குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளை தீவிரமாக வழங்கி வருகின்றனர்.

அதேபோல் காளைகளுக்கு காலை, மாலை இருவேளையும் பச்சரிசி, மண்டை வெல்லம், தேங்காய், பேரீச்சம்பழம் உள்ளிட்ட போஷாக்கு நிறைந்த உணவுகளை வழங்கி வருகின்றனர். வீரர்கள் தங்களுக்கு பழக்கமான காளைகளை, மாதிரி வாடிவாசல் அமைத்து அதன் வழியாக அவிழ்த்து விட்டு மாடு பிடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.