• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த சீமான் வலியுறுத்தல்

அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவைப் பெற்று தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்த உடனேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கும் என்று ஆவலோடு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், ஆட்சி அதிகாரத்தை ஏமாற்றிப் பிடித்துவிட்டோம் என்ற இறுமாப்போடு, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறும் நாளில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த சாத்தியமே இல்லை என்று கடந்த மே மாதம் சட்டசபையிலேயே அறிவித்து, நம்ப வைத்து கழுத்தை அறுத்தது தி.மு.க.வின் திராவிட மாடல் அரசு. எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறி ஏமாற்றி வருவது அரசு ஊழியர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகமாகும். எனவே, 20 ஆண்டு காலமாக போராடி வரும் அரசு ஊழியர்களின் மிக நியாயமான கோரிக்கையாகிய பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.