மதுரை மாவட்டம் சோழவந்தானில் போக்குவரத்து நெருக்கடிகளை குறைப்பதற்காகவும் ரயில்வே கேட்டை தாண்டி ஆபத்தான முறையில் பொதுமக்கள் செல்வதை தவிர்ப்பதற்காகவும் ரயில்வே மேம்பாலம் மற்றும் பேருந்து நிலையம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது.

இரண்டும் திறக்கப்பட்டது முதல் பொதுமக்களின் முழு பயன்பாட்டிற்கு வராத நிலையில் பொதுமக்கள் பயணிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக ரயில்வே மேம்பால படிக்கட்டுகள் மிக உயரமான அளவில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது வரை பயனற்ற நிலையிலேயே உள்ளது. தற்போதும் பொதுமக்கள் ஆபத்தான முறையில் ரயில்வே கேட்டை தாண்டியே அந்த பகுதிக்கு செல்கின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் ரயில்வே மேம்பால படிக்கட்டுகளில் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகையால் ரயில்வே மேம்பால படிக்கட்டுகளை பொதுமக்களின் முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் மற்றும் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராத நிலையில் பொதுமக்கள் சோழவந்தானிலிருந்து வெளியூர் செல்லக்கூடிய பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்து செல்லக்கூடிய நிலை தற்போது வரை ஏற்பட்டு வருகிறது.

இதற்கு காரணம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறி செல்லக்கூடிய சர்வீஸ் சாலையானது இட நெருக்கடி காரணமாக ஒரு பேருந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. சிஎஸ்ஐ சர்ச் அருகிலுள்ள மின்கம்பத்தை அகற்றினால் மட்டுமே பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல முடியும் என்ற நிலை உள்ளது. இதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்போதைய திமுக எம்எல்ஏ வெங்கடேசனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் அவரும் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளிடம் மின்கம்பத்தை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.
ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தற்போதும் புதிய அரசு பொறுப்பேற்று நான்கு மாதங்கள் ஆன நிலையில் சர்வீஸ் சாலையில் பேருந்து செல்ல இடையூறாக உள்ள மின்கம்பம் அப்படியே உள்ளது. ஆகையால் உடனடியாக அதிகாரிகள் மின்கம்பத்தை அகற்றி சர்வீஸ் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுமார் 50 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி கட்டி முடிக்கப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே மேம்பாலம் பயனற்ற நிலையில் இருப்பது சோழவந்தான் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம பகுதி மக்களிடையே கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேலாக சோழவந்தான் பேருந்து நிலையம் முழு பயன்பாட்டில் இல்லாத நிலையில் அந்த பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் சோழவந்தானிலிருந்து செல்லக்கூடிய பொதுமக்கள் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு சோழவந்தான் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே மேம்பால படிக்கட்டுகளை மறுசீரமைப்பு செய்து முழு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



