• Wed. Sep 23rd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பஸ் நிலையத்தில் ஆணையாளர் ஆய்வு..,

ByKalamegam Viswanathan

Sep 23, 2026

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, ஆணையாளர் மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் பழுதடைந்துள்ளதை பார்வையிட்டதுடன், அவற்றில் உள்ள பழுதுகளை உடனடியாக சரிசெய்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திடவும், அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள நடைபாதை பகுதிகளை பார்வையிட்டதுடன், நடைபாதை பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள தரைதள பகுதிகளை சீரமைத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதுடன், அப்பகுதியில் செயல்பட்டு வரும் தாய்மார்கள் பாலூட்டும் அறை மற்றும் கழிப்பறைகளில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பேருந்து நிலையத்தில் ரூ.15.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேற்கூரை மறுசீரமைப்பு கட்டுமானப் பணிகள் மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிறுத்துமிடத்தில் உள்ள பொது கழிப்பறையில் மராமத்து பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள இரு சக்கர வாகன நிறுத்துமிட வளாகத்தில் பயன்பாடின்றி உள்ள கழிப்பறை கட்டிடத்தை பார்வையிட்டு, அவற்றை மராமத்து செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு உரிய பணிகளை மேற்கொள்ளவும், சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தி தூய்மையாக வைத்துக்கொள்ளவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர் , நகர்நல அலுவலர் மரு.ஆனந்த ஜோதி , சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன்
மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.