• Sat. Apr 20th, 2024

மதிப்பெண்கள் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை..,
மாணவர்களை உற்சாகப்படுத்திய மாவட்ட ஆட்சியர்..

Byadmin

Jun 14, 2022

குஜராத்தில் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தான் 10-ம் வகுப்பில் எடுத்த குறைந்த மதிப்பெண்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இன்றைக்கு வளர்ந்து வரும் கணினி உலகில், பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை மதிப்பெண்களை நோக்கியே ஓட வைக்கின்றனர். மாணவர்களுக்கு பாடம் புரிகிறதோ, இல்லையோ அதிக மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற மனநிலையில்தான் பெற்றோர்கள் இருந்து வருகின்றனர். அதற்கேற்றார்போல், பெரும்பாலான பள்ளிகளும் மாணவர்களை மதிப்பெண் எடுக்க வைக்கும் இயந்திரமாகவே மாற்றி வருகின்றன. மாணவர்களின் இந்த மதிப்பெண் போட்டியால், அவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துவிட்டால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனிடையே, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ள நிலையில், குஜராத்தின் பாரூச் மாவட்ட ஆட்சியராக இருக்கும் துஷார் டி சுமேரா, தனது பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அந்த மதிப்பெண் பட்டியல் தெளிவாக இல்லாத போதிலும் சில பாடங்களின் மதிப்பெண்கள் நன்றாக தெரிகின்றன. அதன்படி, ஆங்கிலத்தில் 100-க்கு 35 மதிப்பெண்களை எடுத்து அவர் ஜஸ்ட் பாஸ் செய்திருக்கிறார். அதேபோல, கணிதத்தில் 36 மதிப்பெண்களை மட்டுமே அவர் வாங்கியுள்ளார். மற்ற பாடங்களிலும் மிக சராசரியான மதிப்பெண்களையே அவர் பெற்றிருக்கிறார். இந்த மதிப்பெண் பட்டியலுக்கு மேலே அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “எனது கிராமத்தில் மட்டுமல்ல எனது பள்ளியிலும் கூட ‘உன்னால் ஒன்றுமே செய்ய முடியாது’ என்ற வார்த்தைதான் என்னை நோக்கி கூறப்பட்டு வந்தது” என துஷார் டி சுமேரா கூறியுள்ளார்.
மதிப்பெண்கள்தான் வாழ்க்கையை தீர்மானிக்கும் என இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு சொல்லப்பட்டு வரும் நிலையில், 10-ம் வகுப்பு தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண்களை எடுத்த ஒருவர், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வருகிறார் என்ற செய்தி அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தருவதாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *