


மலேசியாவில் நடைபெறும் இன்டர்நேஷனல் கராத்தே போட்டி மற்றும் தேசிய அளவில் நடைபெறும் யோகா போட்டிக்கு செல்லும் கம்பம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள புனித சென்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வியோடு பல்வேறு தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளக் கூடிய கூடுதல் செயல்பாடுகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் யோகா, கராத்தே, வாலிபால், ஃபுட்பால் மற்றும் அத்தலடிக் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிவாகை சூடி வருகின்றனர்.

இப்பள்ளியில் பயிலக்கூடிய 22 மாணவ மாணவிகள்
யோகாசன போட்டிகளில் பங்கேற்று தற்போது புனேவில் நடைபெறும் தேசிய அளவிலான யோகாசனப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். இதேபோன்று இப்பள்ளியில் பயிலும் நான்கு மாணவ மாணவிகள் கராத்தே போட்டிகளில் பங்கேற்று தங்களது திறன்களை வெளிப்படுத்தி அடுத்தபடியாக மலேசியாவில் நடைபெறும் அகில உலக கராத்தே போட்டியிலும் கலந்து கொள்கின்றனர். யோகா மற்றும் கராத்தேயில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு செல்லும் மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் வண்ணம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இவ்விழாவில் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள், போட்டிகளில் பங்கேற்க கூடிய மாணவ மாணவியரின் பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பூச்செண்டு, பொன்னாடைகள், நினைவு பரிசுகள் வழங்கி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை இருதய மேரி மற்றும் ஆசிரிய பெருமக்கள் கராத்தே மற்றும் யோகா பயிற்சி ஆசிரியர் கராத்தே ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்தப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக அகில உலக கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

